மத்திய அரசால் வழங்கப்படும் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் இந்த விருதுப் பட்டியலில், தமிழ் திரைப்படங்கள் அடுத்தடுத்துப் பல முக்கிய விருதுகளைக் குவித்து சாதனை படைத்து வருகின்றன.

இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷின் அசாத்தியமான நடிப்புத் திறனைப் பாராட்டும் வகையில், அவருக்குச் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தேசிய விருது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையும், விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பையும் பெற்ற ‘அமரன்’ திரைப்படம் இரண்டு முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு உணர்வுப்பூர்வமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிறந்த எடிட்டிங் காண தேசிய விருதையும் அமரன் படத்திற்காக ஆர். கலைவண்ணன் வென்றுள்ளார்.

இவர்களைத் தவிர, தமிழ் சினிமாவின் பிற முன்னணித் திரைப்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. அந்த வகையில், கார்த்தி-அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி மனதைத் தொட்ட ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்குச் சிறந்த ஒலிக்கலவை விருது கிடைத்துள்ளது. அதேபோல், விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளை அமைத்ததற்காக மாஸ்டர் அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப்பயிற்சிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று  மகாராஜா திரைப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாசுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம், இந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதை வென்றுள்ளது.