பெங்களூரு நகர வீதியில் போக்குவரத்து விதிகளை மிகச் சரியாகப் பின்பற்றி, சில தெருநாய்கள் சாலையைக் கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக மனிதர்களே போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் அவசர உலகில், இந்த வாயில்லா ஜீவன்கள் காட்டிய ஒழுக்கம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், பிஸியான ஒரு சாலையில் ஒரு நாய் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. வண்டிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சாலையில், சட்டென்று பாய்ந்து ஓடாமல், வண்டிகளின் வேகம் குறையும் வரை அந்த நாய்கள் மிக மிக பொறுமையாகக் காத்திருக்கின்றன.

“>

வாகனங்கள் நின்றதும், பாதசாரிகள் கடப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளின் மீது மட்டுமே, மிக ஒழுங்காக அணிவகுத்து சாலையைக் கடக்கின்றன. மனிதர்கள் கூட எங்கு வேண்டுமானாலும் சாலையைக் கடக்கும் இந்தச் சூழலில், இந்த நாய்களின் ட்ராஃபிக் சென்ஸ் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களையும், வியப்பையும் கொட்டி வருகின்றனர்.

இந்த நாய்களுக்குத் தெரிந்த ஜீப்ரா கிராசிங் விதி, பல மனிதர்களுக்குத் தெரிவதில்லை, அவர்கள் அதை வண்டிகளை பார்க் செய்யும் இடமாகத்தான் பார்க்கிறார்கள் என்றும், நாய்கள் பல மனிதர்களை விட நாகரீகமாக நடந்துகொள்கின்றன என்றும் நெட்டிசன்கள் கமெண்டுகளை இணையத்தில் அள்ளித் தெளித்து வருகின்றனர்.