இந்தியாவில் பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பது மற்றும் சமூகப் பொறுப்புணர்வு என்பது இன்னும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர், தான் சாப்பிட்ட வாழைப்பழத் தோலை தண்டவாளத்தில் எறிந்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தட்டிக்கேட்ட போது அவர் காட்டிய அலட்சியமான குணம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

“>

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, மக்களின் பெரும் கோபத்தைத் தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் குப்பையை வீசிய நபரை அங்கிருந்த ஒருவர் தட்டிக்கேட்கிறார். ஆனால், அதற்கு அந்த நபர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, மிகவும் திமிரான தொனியில் “அதற்கென்ன?” என்பது போல அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

பெரியவர்கள் இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய இடத்தில், இத்தகைய வயது முதிர்ந்த நபர் ஒருவர் பொது இடத்தில் குப்பை கொட்டிவிட்டு, கேள்வி கேட்டதற்கு இவ்வளவு திமிராகப் பேசியதுதான் நெட்டிசன்களை அதிகம் ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்வி கற்றவர்களும், சமூகத்தில் வசதியானவர்களாக இருக்கும் பலருமே தங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், தங்களது சுயநல வளையத்திற்குள்ளேயே வாழ்கிறார்கள் என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.

மேலும், தவறைச் சுட்டிக்காட்டினாலும் சற்றும் குற்ற உணர்ச்சியின்றி, இவ்வளவு தைரியமாகப் பேசும் இத்தகைய அலட்சியப் போக்கு மாற வேண்டும் என்றும், பொது இடங்களில் தூய்மையைப் பேண கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.