திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் சித்தேரி பகுதியில், சொத்துத் தகராறு காரணமாகப் பார்வை மாற்றுத்திறனாளியான வயதான தாயை அவரது சொந்த மகனே கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு தாய்க்கும் நேரக் கூடாத இந்த அநீதி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்தத் தாய் விஜயலட்சுமி, பார்வைத் திறன் குறைபாடுடைய முதியவர் ஆவார். சொத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரது மகன் கோபி என்பவர், பெற்ற தாய் என்றும் பாராமல் அவரது முகத்திலேயே எட்டி உதைத்து, கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட கோபி, தனது சகோதரரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தட்டிக்கேட்ட தனது தாயை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார். இந்த மோதலின் போது, குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
”பெத்த தாயை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த மகனுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
