தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் வேளையில், எளிய மக்களின் அன்றாடப் பயன்பாடாக இருக்கும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக உறுதியாக உள்ளார்.

சமீபகாலமாகப் பல்வேறு துறைகளின் கீழ் தொடர் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், நேற்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், தமிழகத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையை முழுமையாக நவீனமயமாக்கும் வகையில் உடனடியாக 2,000 புதிய குளிர்சாதன (AC) மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

​பொதுவாகக் குளிர்சாதனப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தால் டிக்கெட் கட்டணம் உயரும் என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும். ஆனால், முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடனான கூட்டத்தில், “புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தாலும், சாதாரண மக்கள் பயணிக்கும் டிக்கெட் கட்டணத்தை ஒரு பைசா கூட உயர்த்தக் கூடாது” என்று மிகக் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளார்.

சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினசரிப் பயன்படுத்தும் பேருந்து சேவையில் கட்டணத்தை உயர்த்துவது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த முடிவில் முதலமைச்சர் பிடிவாதமாக இருப்பதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ​கட்டணத்தை உயர்த்தாமல் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறையின் வருவாயை எப்படிப் பெருக்குவது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு முதலமைச்சர் விஜய் ஒரு அருமையான மாற்று யோசனையை முன்வைத்துள்ளார்.

அரசுப் பேருந்துகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நவீன விளம்பரங்கள் (Bus Advertisements) செய்வதன் மூலமும், பேருந்து நிலையங்களில் உள்ள விளம்பரப் பலகைகள் மூலமும் வணிக ரீதியான வருவாயை அசுர வேகத்தில் பெருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் மக்களுக்குக் கூடுதல் சுமை தராமல், நவீன ஏசி பேருந்து வசதிகளையும் தடையின்றி வழங்க முடியும் என்று தவெக அரசு நம்புகிறது.

எளிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்காமல் சொகுசுப் பயணத்தை வழங்கத் துடிக்கும் முதலமைச்சர் விஜய்யின் இந்த மக்கள் நலத் திட்டம், தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.