வங்கதேசத்தில் கல்வி அமைச்சரின் ஒரு கருத்து தற்போது நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தேர்வுகளை நடத்த அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்தப் போராட்டத்தை விமர்சித்த கல்வி அமைச்சரின் பேச்சே தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்களும் கடும் சிரமங்களை சந்தித்தனர். இந்தச் சூழலில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கல்வி அமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “பிராய்லர் கோழிகள்” என்று விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கருத்து மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் அமைச்சரின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன.
இதையடுத்து, அந்த விமர்சனத்தையே எதிர்ப்பின் அடையாளமாக மாற்றிய மாணவர்கள் “பிராய்லர் சிக்கன் கட்சி” (Broiler Chicken Party) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை அறிவித்துள்ளனர். மேலும், கல்வி அமைச்சர் தனது கருத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதையும் மாணவர்கள் முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பலருக்கும் இந்தியாவில் சமீபத்தில் இணையத்தில் வைரலான “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party)-யை நினைவுபடுத்தியுள்ளது. அந்தப் பெயரும் அரசியல் நையாண்டி மற்றும் இணைய விவாதங்களில் பெரும் கவனம் பெற்றிருந்தது. தற்போது அதேபோல், வங்கதேசத்தில் “பிராய்லர் சிக்கன் கட்சி” என்ற பெயர் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒரு வார்த்தை எப்படி பெரிய எதிர்ப்பையும் புதிய இயக்கத்தையும் உருவாக்குகிறது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் உதாரணமாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் “கரப்பான் பூச்சி ஜனதா”, வங்கதேசத்தில் “பிராய்லர் சிக்கன்” என்ற பெயர்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் விவாதங்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
