மனித வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! ஒரு மனிதன் தன் ஆயுள் முழுக்கக் கண்மூடித்தனமாக உழைப்பது எதற்காக? தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பைத் தேடவும், வாழ்க்கையை இன்னும் சௌகரியமாக வாழவும்தான். ஆனால், பல்லாண்டுகள் போராடி, வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் சேர்ந்த பிறகும், ஒரு சில ரூபாய்களைச் செலவழிக்க அஞ்சி, இன்னும் ஏழ்மையில் இருப்பது போலவே மனிதர்கள் வாழ்வது எவ்வளவு பெரிய முரண்பாடு?
தொழில்முனைவர் பிரேம் சோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு கருத்து, தற்போது இணையத்தில் ஒரு மாபெரும் தத்துவார்த்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. “பண விஷயத்தில் கவனமாக இருப்பதற்கும் , பணத்தைச் செலவழிக்கப் பயப்படுவதற்கும் உள்ள மெல்லிய வேறுபாடு என்ன?” என்ற ஆழமான கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
பிரேம் சோனி தனது பதிவில், “பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் கூட, தங்களின் ஆரோக்கியத்திற்கோ, வீட்டு வேலைகளுக்கு உதவி ஆட்களை நியமிப்பதற்கோ அல்லது தங்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் சேவைகளுக்கோ செலவு செய்யக் கடுமையாகத் தயங்குகிறார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குக் காரணம், மூத்த தலைமுறையினர் வளர்ந்த நிதி நிச்சயமற்ற (Financial Insecurity) காலம்தான். ஒவ்வொரு ரூபாயையும் சேமித்தால் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் வாழ்ந்து பழகிய அவர்களின் மனதில், அந்தப் பயம் ஒரு நிரந்தர வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. அதனால்தான், 10 கோடி ரூபாய் சொத்து இருந்து, 70 வயதான பிறகும், ஒரே ஒரு மகன் மட்டுமே சொத்துக்கு வாரிசாக இருந்தாலும் கூட, பல முதியவர்களால் அந்தச் செல்வத்தை அனுபவிக்க முடிவதில்லை. அவர்கள் இன்னும் தெருவோரக் காய்கறி விற்பனையாளர்களிடம் சில ரூபாய்களுக்காகப் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு நேர் மாறாக, இன்றைய இளைய தலைமுறையினர் பணத்தை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பணம் என்பது வெறும் வங்கியில் பூட்டி வைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; அது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும், சௌகரியத்தை வழங்கவும் பயன்படும் ஒரு கருவி.
சோனி கூறியது போல், “உண்மையான செல்வம் என்பது நீங்கள் எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறீர்கள் என்பதனால் அளவிடப்படுவதில்லை, மாறாக விவேகமாகச் செலவு செய்வதற்கான சுதந்திரத்தாலேயே அளவிடப்படுகிறது.” பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்ல வேண்டிய மிகப்பெரிய சொத்து என்பது வெறும் பணம் மட்டுமல்ல, அதை எந்தவித அச்சமும் இன்றி, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான தன்னம்பிக்கையும்தான்.
இணையவாசிகளின் காரசாரமான விவாதப் பக்கம்:
இந்தப் பதிவு வெளியானதும், பயனர்கள் தங்களின் சொந்தக் குடும்ப அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு பயனர், “10 கோடி சொத்து இருந்தாலும் பேரம் பேசுபவர்களை எனக்குத் தெரியும். வெறும் 4% SWP (விற்பனை வட்டி) திட்டத்தில் முதலீடு செய்திருந்தாலே அவர்கள் ராஜா போல வாழலாம், ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், சோனியின் கருத்தை மறுத்து சிலர், “5 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் யாரும் வறுமையில் வாழ்வதில்லை, அவர்கள் சிக்கனமாக வாழ்கிறார்களே தவிர வறுமையில் இல்லை” என்றும், “கைப்பேசியில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே, வீட்டைச் சுத்தம் செய்ய நகர்ப்புற நிறுவன ஊழியர்களை அழைப்பது நாகரிகம் அல்ல, அது சோம்பேறித்தனம்” என்றும் தங்களின் மாற்றுக்கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
மனித மனங்களின் இந்த முரண்பாட்டை கூர்ந்து நோக்குகினால். சேமிப்பு என்பது ஒழுக்கம், அது ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தச் சேமிப்பே ஒரு கட்டத்தில் பயமாக மாறி, உங்களின் முதுமைக் காலத்து நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் உறிஞ்சத் தொடங்கினால், நீங்கள் சேர்த்த செல்வத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?
பணத்தைச் சேர்த்துவிட்டு, அதை அனுபவிக்கத் தெரியாமல் கஞ்சத்தனமாக வாழ்ந்து மறைவது வாழ்க்கையல்ல. வறுமையின் நினைவுகளிலிருந்து விடுபட்டு, நாம் சேர்த்த செல்வத்தை நமக்காகவும் நம் சமூகத்திற்காகவும் அச்சமின்றிப் பயன்படுத்தும் அந்தப் பக்குவமே ஒரு மனிதனின் உண்மையான பொருளாதார சுதந்திரம்!
Your parents are suffering from untreated financial trauma.
Indian parents will sit on ₹5 crores of real estate and fixed deposits yet still walk in 40°C heat and fight a street vendor to save ₹15 on tomatoes. They proudly call this middle class values.
It is not. It is a…
— Prem Soni (@ValueWithPrem) July 14, 2026
“>
