சமூக வலைத்தளங்களான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த உலகையே உருக வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தான் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக். வியட்நாம் நாட்டில் காரின் உள்ளே எடுக்கப்பட்ட அந்தச் சிறிய காணொளி, மனிதநேயம் இன்னும் செத்துப் போகவில்லை என்பதைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழ வைக்கும் அந்த வீடியோவில், ஒரு தாய்க்கும் மகனுக்கும் டாக்ஸி ஓட்டுநருக்கும் இடையே நடந்த பாசப் போராட்டம் அப்படியே பதிவாகியுள்ளது.

கார் சீட்டில் நடந்த பாசப் போராட்டம்

​அந்த வீடியோவில், வாலிபர் ஒருவன் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, டாக்ஸியின் பின் இருக்கையில் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். கார் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தை வந்தடைகிறது. கார் நின்றதும், அவர்கள் கீழே இறங்குவதற்குக் முன்பாகவே, அந்த வாலிபன் டாக்ஸிக்குரிய வாடகைப் பணத்தை எடுத்து ஓட்டுநரிடம் நீட்டுகிறான். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த டாக்ஸி டிரைவர் வாடகைப் பணத்தை வாங்க மறுத்துவிடுகிறார்.

​”அம்மாவுக்கு மருந்து வாங்கு தம்பி!”

​பணத்தை வாங்க மறுத்ததோடு நில்லாமல், அந்த ஓட்டுநர் வாலிபனைப் பார்த்து, “தம்பி, உங்க அம்மாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடக்குதுல்ல? எனக்கு இந்த சவாரிக்குக் காசு எதுவும் வேண்டாம். இந்த காசை வச்சு அம்மாவுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை நல்லபடியா வாங்கிக் கொடுங்க,” என்று அன்புக் கட்டளையிடுகிறார். டாக்ஸி ஓட்டுநரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த வாலிபனே ஒரு நிமிடம் அதிர்ந்து போகிறான்.

விடாமல் மறுத்த ஓட்டுநர்

​இருப்பினும், கார் டிரைவருக்குச் சேர வேண்டிய உழைப்பின் காசை எப்படடியாவது கொடுத்துவிட வேண்டும் என்று அந்த வாலிபன் பலமுறை காசைக் கொடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், அந்த ஓட்டுநரோ எதற்கும் மசியாமல், “கண்டிப்பாக எனக்குப் பணம் வேண்டாம்” என்று ஒற்றைக் காலில் நின்று மறுத்துவிடுகிறார். வாலிபனின் கையைத் தடுத்து, தாயின் மருத்துவச் செலவுக்குப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

குவியும் நெட்டிசன்களின் பாராட்டுகள்

​அதோடு நிறுத்தாமல், “இனிமேல் எப்போது ஹாஸ்பிட்டல் போக வேண்டும் என்றாலும் தயங்காமல் என்னை அழையுங்கள், நானே வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றும் அந்த டிரைவர் பாசத்தோடு கூறி அனுப்பி வைக்கிறார். காரினுள்ளே ரகசியமாகப் பதிவான இந்த எதார்த்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த டாக்ஸி டிரைவரின் பெருந்தன்மையையும் மனிதநேயத்தையும் பாராட்டி, இணையத்தில் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.