சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில், பல்வேறு சமூக நிதி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) பங்களிப்பை முதலமைச்சர் விஜய் நேரில் பெற்றுக்கொண்டார்.
இந்த நிதியானது அரசு மருத்துவமனைகளில் அதிநவீன வசதிகளை ஏற்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை தங்கு தடையின்றி கிடைக்கவும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவ சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் மிக முக்கியமான “நலம் டிஎன்” (Nalam TN) என்ற புதிய இணையதள சேவையையும் முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகளின் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் பொதுமக்கள் இந்த ஒரே தளத்தில் மிக எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். மருத்துவத்துறையில் வெளிப்படைத்தன்மையையும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் புகுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
