கேரள மாநிலம் எடத்வா பகுதியைச் சேர்ந்த சானுகுட்டன் (30) என்பவருக்கும், ஹரிஷ்மா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த ஹரிஷ்மா தனது வீட்டில் வசித்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹரிஷ்மா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் துயரச் செய்தி தோஹாவில் இருந்த சானுகுட்டனுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சொந்த ஊர் திரும்புவதற்காக விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்துள்ளார். விமான நிலையத்திற்கு வரவிருந்த சானுகுட்டனை அழைத்துச் செல்வதற்காக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் காத்திருந்த நிலையில், அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தொடர்பு கொண்டு உறவினர்கள் தேடத் தொடங்கினர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு விடுதியில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், அது சானுகுட்டன் தான் என்பதை உறுதி செய்தனர். மனைவி இறந்த துக்கம் தாளாமல், கேரளா வரவிருந்த கணவன் பெங்களூரு விடுதியில் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
