இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அமர வைக்கும்போது பெற்றோர்கள் காட்டும் சிறிய அலட்சியம், எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்பதற்கு சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றே சாட்சி.

நபர் ஒருவர் தனது வாகனத்தில் இரு குழந்தைகளுடன் வந்து இறங்கியபோது, ஒரு குழந்தையை மட்டும் கீழே இறக்கிவிட்டு, மற்றொரு சிறுமியை வாகனத்திலேயே அமர வைத்துவிட்டுச் சென்றார்.

அவர் மற்ற குழந்தையை கவனிக்கச் சென்ற அந்த சில நொடிகளில், எதிர்பாராத விதமாகச் சிறுமி எக்ஸிலேட்டரைத் திருக, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சீறிப் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

24 நொடிகள் ஓடும் இந்த அதிர்ச்சிகரமான வீடியோ, @gharkekalesh என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. வாகனத்தை நிறுத்தும்போதே அதன் சாவியை அகற்றியிருந்தாலோ அல்லது குழந்தையை வாகனத்தில் தனியாக அமர வைக்காமல் இருந்திருந்தாலோ இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியும்.

குழந்தைகளுக்கு வாகனங்களில் பாதுகாப்பு அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இந்த வீடியோ, பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதில் ஐயமில்லை.

சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த பலரும், வாகனத்தை நிறுத்தியதும் சாவியை எடுப்பதையும், குழந்தைகளைத் தனியாக வாகனத்தில் விடக்கூடாது என்பதையும் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.