ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான ஒரு சகாப்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாக, அதன் அஸ்திவாரமாக விளங்கிய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தனது 17 ஆண்டுகால சிஎஸ்கே பயணத்திற்கு விடை கொடுத்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களம் புகுந்த பிளெமிங், அடுத்த ஆண்டே (2009) அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். தோனி – பிளெமிங் என்ற இந்த அபாரக் கூட்டணி, சென்னை அணியை வெறும் கிரிக்கெட் அணியாக மட்டுமில்லாமல், உலக அளவில் ஒரு அசைக்க முடியாத டி20 பிராண்டாக மாற்றிக் காட்டியது.
பிளெமிங்கின் சாதுரியமான வழிகாட்டுதலின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமன்றி, விளையாடிய சீசன்களில் 12 முறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, அதில் 10 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணிக்கும் கிடைக்காத அசுர சாதனையை சிஎஸ்கே தன்வசப்படுத்தியது. தற்போது பிளெமிங் சிஎஸ்கே பாசறையிலிருந்து வெளியேறியுள்ளதால், மஞ்சள் படையின் அடுத்த ‘வியூக மாஸ்டர்’ யார், அந்த சிம்மாசனத்தில் அமரப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் விவாதமும் உலகெங்கும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களிடையே தீயாகப் பரவத் தொடங்கியுள்ளது.
