பீகார் மாநிலத்தில் சினிமா திரைக்கதையை மிஞ்சும் வகையில் நடந்துள்ள ஒரு மாப்பிள்ளையைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ககாரியா பகுதியைச் சேர்ந்த 22 வயதான பி.ஏ. கல்லூரி மாணவர் நிதிஷ் குமார், தன்னை கத்தி  முனையில் மிரட்டி, வலுக்கட்டாயமாக 34 வயது பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் சந்தித்த சீதா தேவி என்ற பெண், தனது தங்கையைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பழகியதாகவும், பின்னர் கல்லூரிக்கு வந்த தன்னை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்று, நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உதவியுடன் கோயிலில் வைத்து மிரட்டித் திருமணம் செய்து கொண்டதாகவும் நிதிஷ் குமார் கூறுகிறார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்ய முயன்றபோது, அவர் கையெழுத்திட மறுத்து கூச்சலிட்டதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால், மணப்பெண் சீதா தேவியின் தரப்போ இந்த புகார்களை முற்றிலும் மறுத்து, கதையை வேறு கோணத்தில் திருப்புகிறது. தான் ஏற்கனவே விவாகரத்தானவர் என்றும், ஒரு குழந்தையின் தாய் என்றும் தெரிந்தே நிதிஷ் குமார் தன்னை காதலித்து, முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சீதா தேவி வாதிடுகிறார். இருவருக்குள்ளும் கடந்த இரண்டு மாதங்களாகக் காதல் இருந்ததாகவும், நிதிஷ் குமார் விருப்பத்துடன்தான் திருமணம் நடந்தது என்பதற்குச் சான்றாக வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், சீதா தேவியின் வங்கி கணக்கில் இருக்கும் 6 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிக்க நிதிஷ் குமார் திட்டமிட்டதாகவும், அதற்குத் தன் குடும்பத்தினர் சம்மதிக்காததால், திருமணத்தை மறைக்க ‘கடத்தல் நாடகம்’ ஆடுவதாகவும் சீதா தேவி அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் நீதிமன்ற வளாகமே போர்க்களமாக மாறிய நிலையில், போலீசார் இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.