”விதி யாரை விட்டது? நொடிப் பொழுதில் திசைமாறி வந்த மரணம்!”
திரைப்படங்களில் வரும் அதிர்ச்சியூட்டும் விபத்துக் காட்சிகளைப் பார்த்து நாம் பலமுறை உறைந்து போயிருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையிலேயே ‘பைனல் டெஸ்டினேஷன்’ திரைப்பட பாணியில், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மரணம் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதிர வைத்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் சந்தௌலி (Chandauli) மாவட்டத்தில், கோவில் இடிப்புப் பணியின் போது எதிர்பாராத விதமாக நடந்த இந்த கோர விபத்தின் வீடியோ, பார்ப்பவர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கிறது.
சந்தௌலி மாவட்டத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்யா நகரில் (முன்பு முகல்சராய்), சாலை விரிவாக்கப் பணிகளுக்காகப் பல தசாப்தங்கள் பழமையான காளி கோவில் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. கோவில் கமிட்டியின் முழுச் சம்மதத்துடன், சிலைகள் அனைத்தும் ஏற்கனவே முறைப்படி புதிய கோவிலுக்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த இடிப்புப் பணி தொடங்கப்பட்டது. சம்பவத்தன்று, ராட்சத புல்டோசர் கொண்டு அந்தப் பழமையான கோவிலின் பிரம்மாண்டமான கோபுரத்தை (Dome) இடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சுற்றிலும் பொதுமக்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். புல்டோசர் கோபுரத்தைத் தாக்கிய அந்தச் செக்கண்ட், யாரும் எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்ந்தது. அந்தப் பிரம்மாண்ட கோபுரம் திடீரென சரிந்து, புல்டோசர் மீது பலமாக மோதியது. அப்படி மோதிய வேகத்தில் அதன் திசை முற்றிலும் மாறி, அருகில் நின்றிருந்தவர்களை நோக்கி அசுர வேகத்தில் உருண்டு வரத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பொதுப்பணித்துறை (PWD) ஊழியரான பல்தேவ் யாதவ் என்பவர் மீது அந்தப் பிரம்மாண்ட கோபுரம் நேராக உருண்டு விழுந்து, அவரை இடிபாடுகளுக்குள் அமுக்கியது.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில், அந்தப் பெரிய கோபுரம் புல்டோசரில் பட்டுத் தெறித்து, திசைமாறி ஓடிவந்து உயிரைப் பறித்த அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோவில் இடிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இடிப்புப் பணியின் போது ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா? விபத்துக்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமா? என்பது குறித்துப் போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
