மும்பை ஏசி லோக்கல் ரயில் ஒன்றில் மராத்தி மொழியில் பேசுவது தொடர்பாக பயணி ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மராத்தி பேசத் தெரியாத ஒரு டிக்கெட் பரிசோதகரிடம், அந்தப் பயணி மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தியதால் இந்த மோதல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்றொரு மராத்தி பேசும் டிக்கெட் பரிசோதகர் தலையிட்டு, “நான் மராத்தி பேசுபவர் தான், என்னிடம் பேசுங்கள், ஊழியர்களைத் தாக்க வேண்டாம்” என்று கூறி சமாதானப்படுத்த முயன்றார்.

“>

இருப்பினும், இந்த வாக்குவாதம் மேலும் தீவிரமடைந்ததோடு, அந்த டிக்கெட் பரிசோதகரும் இச்சம்பவத்தைத் தன் மொபைலில் பதிவு செய்யத் தொடங்கியதால் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பயணி மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகிய இரு தரப்பினரும் அந்தேரி அரசு ரயில்வே காவல்துறையை அணுகி ஒருவருக்கொருவர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வைரல் வீடியோ மற்றும் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான விசாரணை முடிவடைந்த பிறகு, உரிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.