வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தங்களின் சொந்த ஊரிலிருந்து வரும் பார்சல் என்பது வெறும் ஒரு டெலிவரி மட்டுமல்ல, அது குடும்பத்தினரின் எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடாகும். அந்த வகையில், கனடாவில் வசிக்கும் ஹிமானி மிஸ்திரி என்ற பெண், இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடமிருந்து 20 கிலோ எடையுள்ள ஒரு பெரிய பார்சலைப் பெற்றுள்ளார்.
மேலும் ‘பாசம் மற்றும் ஆம்ரஸால் நிறைந்தது’ என்ற வாக்கியத்துடன் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த அண்பாக்சிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோடு அந்தப் பார்சலில் அவரது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பார்த்துப் பார்த்து வாங்கிய ஆம்ரஸ், தேப்லா போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள், உடைகள், அணிகலன்கள் மற்றும் ஹிமானி மற்றும் அவரது கணவருக்கான அன்பளிப்புகளை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ள ஹிமானி, “வெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் மட்டுமே இந்த உணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் எனது பெற்றோர் வெறும் பரிசுகளை மட்டும் அனுப்பவில்லை, தங்களின் பாசத்தையும், கதகதப்பையும், வீட்டின் ஒரு பகுதியையுமே பார்சலாக அனுப்பியுள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நாம் எவ்வளவு தூரம் தள்ளி வாழ்ந்தாலும் பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் என்றும் குறைவதில்லை என்பதை இந்த வீடியோ பலருக்கும் உணர்த்தியுள்ளது.
