புனே மாவட்டம் மோஷி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரமான கட்டிட விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் திகி பகுதியைச் சேர்ந்த 36 வயதான சன்னி அசோக் மானே என்பவரும் ஒருவர்.
மேலும் இவர் அந்த கிடங்கு வளாகத்தில் வாகன ஓட்டுநராக கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். விபத்து நடந்த அன்று, சன்னியின் மனைவி காஞ்சன் அவருக்கு மிகவும் பிடித்த பிரியாணியைச் சமைத்து, அவரை மதிய உணவிற்காக வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். கிடங்குக்கு அருகிலேயே வீடு இருந்ததால், வேலை முடிந்ததும் அவரும் வீட்டிற்குச் செல்லத் தயாராகியுள்ளார்.
ஆனால், அந்த நேரத்தில் அவருடைய சக பணியாளரும் நண்பரும், “இன்று என்னுடன் தங்கி மதிய உணவு சாப்பிடு” என்று வற்புறுத்தி அன்போடு அழைத்துள்ளார். நண்பனின் வார்த்தைக்கு மதிப்பளித்து, சன்னி வீட்டிற்குச் செல்லாமல் அங்கிருந்த உணவகத்தில் சாப்பிடத் தங்கியுள்ளார்.
இதனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் உணவருந்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அருகில் இருந்த மிகப்பெரிய குப்பை மலை திடீரென சரிந்து அங்கிருந்த கட்டிடத்தின் மீது பயங்கர வேகத்தில் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே சன்னி அசோக் மானே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி அன்போடு சமைத்த பிரியாணியை சாப்பிட வீட்டிற்குச் செல்லாமல், நண்பனுக்காகத் தங்கிய அந்த ஒரே ஒரு நிமிட முடிவு அவரது உயிரைப் பறித்து, ஒரு குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.
அதோடு சன்னியின் வயதான பெற்றோர், மனைவி காஞ்சன் மற்றும் இரண்டு மற்றும் எட்டு வயதுடைய இரு சிறு குழந்தைகள் என மொத்தக் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக அவரே இருந்ததால், சன்னியின் இந்த திடீர் மரணம் அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிலைகுலையச் செய்து பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
