இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர்ஷைன் பகுதியைச் சேர்ந்த கிரஹாம் பாரட் என்ற விவசாயி, போட்டி அடிப்படையில் தனது தோட்டத்தில் பயிரிட்ட காய்கறிகள் மூலம் இரட்டை கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.

இவர் தனது விளைநிலத்தில் அசாத்திய எடையில் விளைந்த ‘யானைப் பூண்டு’ மற்றும் ‘ஸ்னோ பட்டாணி’ ஆகியவற்றை பெர்ஷயலில் உள்ள வார் கிரேவ் நர்சரி செடி மையத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அதிகாரிகள் முன்னிலையில் அவற்றை எடை போட்டுப் பார்த்தபோது அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வியப்பில் உறைந்து போயினர்.

அந்த ராட்சத யானைப் பூண்டு மட்டும் சுமார் 1 கிலோ 750 கிராம் (3 பவுண்டு 13.7 அவுன்ஸ்) எடையும், 7.5 அங்குல விட்டமும் கொண்டு பார்ப்போரைக் கண் இமைக்க மறக்கச் செய்யும் வகையில் இருந்தது.

அதேபோல் அவர் கொண்டு வந்த ஸ்னோ பட்டாணியும் 28 கிராம் எடையுடன் உலகின் மிகக் கனமான பட்டாணியாக உருவெடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்தது.

அதிக காரத்தன்மை கொண்ட இந்த ராட்சதப் பூண்டு மற்றும் அசாத்திய பட்டாணி ஆகிய இரண்டுமே உலகிலேயே மிகக் கனமான காய்கறிகள் என கின்னஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான உலக சாதனைச் சான்றிதழ்கள் விவசாயி கிரஹாம் பாரட்டிடம் பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன.