கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், “கரூரில் எந்தவொரு கலவரமோ அல்லது இயற்கை பேரிடரோ நடக்கவில்லை. மதியம் 12 மணிக்கு முதல்வர் விஜய் பேசுவார் என்று நம்பி, மக்கள் காலை 9 மணிக்கே அங்கு வந்துவிட்டனர்.
ஆனால், விஜய் இரவு 7.30 மணிக்குத்தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். விஜய்யைக் காண்பதற்காகப் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில், கிட்டத்தட்ட 12 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்” என்று சுட்டிக்காட்டினார்.
“அடிப்படை மனிதநேயமும் பொது அறிவும் உள்ள எவருக்கும், நீண்ட நேரம் வெயிலில் பசியோடு நின்றால் மயக்கம் வரும் என்பது தெரியும். ஏன், விஜய் இதேபோல் 10 மணி நேரம் நின்றால் அவரே மயங்கித்தான் விழுவார்.
அங்கு ஏற்பட்ட 100 பேர் மயக்கமடைந்த சம்பவத்தில், துரதிர்ஷ்டவசமாக 41 பேர் உயிரிழந்தனர். மீதமிருந்த 60 பேரை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது திமுக அரசுதான். விஜய் யாரையும் காப்பாற்றவில்லை” என அவர் அனல் பறக்கக் குறிப்பிட்டார்.
மேலும் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “பாதிக்கப்பட்ட மக்களை ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்காமல் அன்றைக்குச் சென்னைக்கு ஓடி ஒளிந்தது விஜய்தான். இந்த விபத்து முழுக்க முழுக்க அவர் தாமதமாக வந்ததால் ஏற்பட்டது என்பதை உணராமல், முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு இதைவிட ஒரு மோசமான பொய்யைக் கூற முடியாது” என்று சாடினார்.
