ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அங்கித் புரோஹித் என்ற இந்திய இளைஞர், அந்நாட்டின் தனித்துவமான அலுவலகக் கலாச்சாரம்  குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்திய கார்ப்பரேட் மற்றும் ஐடி துறையினர் பொறாமைப்படும் வகையிலான ஜப்பானிய அலுவலகங்களின் வியக்கத்தக்க ஒழுக்கமுறைகளை அவர் இதில் பகிர்ந்துள்ளார்.

ஜப்பானில் நேரம் தவறாமை என்பது தெய்வமாக மதிக்கப்படுகிறது; காலை 9 மணி அலுவலகம் என்றால், 9 மணிக்கு ஒரு நிமிடம் முன்பாகவே ஊழியர்கள் அங்கு இருக்க வேண்டும். அதேநேரம், அங்கு ‘நான் தான் பாஸ்’ என்ற அதிகாரத் தோரணை எங்கும் இருக்காது; நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூட சாதாரண ஊழியர்களைப் போல லோக்கல் ரயிலில் தான் பயணம் செய்வார். மேலும், மதியம் 12 முதல் 1 மணி வரையிலான மதிய உணவு இடைவேளையில் யாரும் வேலை தொடர்பாக தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அங்குள்ள லிஃப்ட் பயன்பாட்டில் கூட ஒரு தனி ஒழுங்குமுறை பின்பற்றப்படுகிறது; லிஃப்ட் பொத்தானுக்கு அருகில் நிற்பவர், உள்ளே இருக்கும் அனைவரும் பத்திரமாக வெளியேறும் வரை ‘ஓபன்’ பொத்தானை அழுத்திக் பிடித்துக் கொண்டு, இறுதியாகவே தான் வெளியேற வேண்டும். மிக முக்கியமாக, அங்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி வெறும் 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தாலும், அதற்கான கூடுதல் ஊதியத்தை நிறுவனம் முறையாக வழங்கிவிடுகிறது. ஊழியர்கள் லாக்-அவுட் செய்த பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ மேலாளர்கள் அவர்களைத் தப்பித்தவறிக்கூட மொபைலில் அழைக்க மாட்டார்கள். தனிநபர் பெருமையைக் காட்டிலும் கூட்டு உழைப்பிற்கும் பரஸ்பர மரியாதைக்குமே அங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது; வேலையின் வேகத்தை விட அதன் தரமே பிரதானமாகப் பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

.