சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல இயக்குநர் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தை இயக்க தனக்கு ரூ.15 கோடி ஊதியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கித் தொகையான ரூ.8.39 கோடியை இதுவரை அந்நிறுவனம் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே, தனது சம்பள பாக்கியை வழங்கும் வரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருமான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு, வெள்ளிக்கிழமை அன்று முக்கிய இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மேலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே எழுந்துள்ள இந்த ஊதியப் பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே ‘மத்தியஸ்தர்’ ஒருவரை நியமித்து, அவர் மூலமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பிற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
