இங்கிலாந்தில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் சிலருடன், தெற்காசியாவைச் சேர்ந்தவர் எனத் தோன்றும் நபர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக காரில் சென்ற பெண் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் அந்த நபர் சிறுவர்களிடம் பேசுவதைக் கண்டு உடனடியாகத் தனது காரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து அந்தச் சிறுவர்களிடம், “இந்த நபரை உங்களுக்குத் தெரியுமா?” என்று அப்பெண் கேட்க, அவர்கள் “தெரியாது” எனப் பதிலளித்துள்ளனர். மேலும், அந்த நபர் தங்களை செல்ஃபி எடுக்க அழைத்ததாகவும் அச்சிறுவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த நபரை நோக்கி, “அவர்களுக்கு உன்னுடன் செல்ஃபி எடுக்க விருப்பமில்லை, உடனே இங்கிருந்து கிளம்பு” என்று தைரியமாக சத்தமிட்டுக் கண்டித்ததை அடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
A woman in a car approaches a group of children aged about six, where a man is present. They don’t know him, but he wanted to take selfies with the children. pic.twitter.com/q1TQrJJCka
— David Atherton (@daveatherton) July 9, 2026
காரில் இருந்தபடியே அப்பெண் எடுத்த இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. ‘டேவிட் அதர்டன்’ என்ற பத்திரிகையாளர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “காரில் சென்ற பெண், அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து ஆறு வயதுக் குழந்தைகளைச் சமயோசிதமாகக் காப்பாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், ஆபத்தை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், சிறு குழந்தைகளைச் சாலையோரத்தில் தனியாகப் பாதுகாப்பின்றி விட்டது யார் என்ற கேள்வியையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த தங்களின் கவலைகளையும் பலரும் எழுப்பி வருகின்றனர்.
