பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பகுதியில், ஒரு தனியார் பெண்கள் விடுதி  இயங்கி வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் நபரின் மகனான அனந்த்  சத்யா என்ற வாலிபர், பகல் நேரத்தில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை சதுக்கத்தில் மோமோஸ் கடை நடத்தி வந்துள்ளார்.

ஆனால், இரவு நேரங்களில் தனது தந்தை நடத்தும் விடுதிக்குள் புகுந்து, அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகளுக்குக் கடுமையான பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த விடுதியில் தங்கியிருந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மைனர் மாணவி ஒருவரை, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அனந்த் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், பயந்துபோன அந்த மாணவி நீண்ட நாட்களாக இந்த அநீதியை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இந்த அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபர் தொடர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில், கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, நொய்டாவில் வசிக்கும் அவரது தாய் சந்தேகமடைந்துள்ளார்.

தாயின் தீவிர விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கண்ணீருடன் விவரித்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக நொய்டா உள்ளூர் காவல் நிலையத்தில் ‘எஃப்ஐஆர்’  பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சம்பவம் நடந்த பீகார் காவல் எல்லைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் காவல் நிலைய ஆய்வாளர் சாம்ராட் தீபக் தலைமையிலான தனிப்படை போலீசார் புதன்கிழமை அன்று குற்றவாளி அனந்தைக் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகத்திற்கு ஏதேனும் தொடர்புள்ளதா அல்லது அவர்களின் அஜாக்கிரதை காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.