புதிய கல்வியாண்டு தொடங்கி மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ள வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தலைகுனிய வைக்கும் படியான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. அங்குள்ள கோர்கோரிபாரா ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஹரிநந்தன் சிங் என்பவர், பள்ளி வளாகத்திலேயே குடித்துவிட்டு ரகளை செய்துள்ளார்.
सूरजपुर- रामानुजनगर ब्लॉक के शाल्ही गांव स्थित खोरखोरीपारा प्राथमिक विद्यालय के हेडमास्टर का नशे की हालत में वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। @SurajpurDist #Chhattisgarh @SchoolEduCgGov pic.twitter.com/w4FXrLzr55
— Haribhoomi (@Haribhoomi95271) July 9, 2026
அவர் மதுபோதையில் தள்ளாடியபடி, பள்ளி வளாகத்தின் தரையில் விழுந்து உருண்டுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, தலைமை ஆசிரியர் ஹரிநந்தன் சிங் போதை தலைக்கேறிய நிலையில் வீடியோ எடுத்தவர்களை நோக்கி அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, கெட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
இந்த அவலக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியரின் இந்த அநாகரீகமான மற்றும் ஒழுங்கீனமான நடத்தையைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்குத் திரண்டு வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
எதிர்காலத் தூண்களான சிறு குழந்தைகள் படிக்கும் இடத்தில் ஒரு தலைமை ஆசிரியரே இப்படி போதையில் மிதப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தவறு செய்த அந்தத் தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் தரப்பில் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
