பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55) என்பவரே இந்த உன்னத செயலைச் செய்தவர் ஆவார். இவர் தனது வீட்டின் படிக்கட்டு பகுதியில் வழக்கமாக நிறுத்தும் மொபட்டின் முன்பக்கப் பெட்டியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிட்டுக்குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டி முட்டையிட்டிருந்ததைக் கண்டுள்ளார்.

பறவையின் கூடு கலைந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், அன்றிலிருந்து தனது இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதே இடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அந்த முட்டையிலிருந்து குருவிக் குஞ்சு வெளிவந்துள்ள நிலையில், தாய்ப் பறவை அதற்குப் பாதுகாப்பாக இரையூட்டி வருகிறது. அந்தப் பறவைக் குஞ்சுகள் முழுமையாக வளர்ந்து, தானாகப் பறந்து செல்லும் வரை வாகனத்தை இயக்கப் போவதில்லை என்று அவர் உறுதியளித்துள்ளார்.