கேரள மாநிலம் வயநாடு கல்லடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவின் போது, ராட்சத டேங்கர் லாரி ஒன்றின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த தம்பதியினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ் – கூடம்மாள் தம்பதியினர், வயநாடு மேம்பாடி பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று வங்கிக்குச் செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இத்தம்பதியினர் காத்திருந்தபோது, கனமழையுடன் சேர்த்து திடீரென ஒட்டுமொத்த மலையே சரிந்து விழுவது போல் பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவின் வேகத்தில் அங்கிருந்த டேங்கர் லாரி ஒன்று தங்களை நோக்கி குலுங்கியபடி துரத்தி வந்ததாகவும், உயிர் பிழைக்க எதிர் திசையில் அலறியடித்து ஓடியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் இத்தம்பதியினர் தங்களது மரண பயத்தை பகிர்ந்துள்ளனர். லாரியின் அடியில் சிக்கிய போதிலும், சாவின் விளிம்பு வரை சென்று மயிரிழையில் உயிர் தப்பிய இவர்களது நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.