கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் சுரண்டப்படுவது குறித்தும், நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ரெடிட் தளத்தில் இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள தனது நிறுவனத்தின் கொடூரமான கதை, படிக்கும் எவரையும் ரத்தம் கொதிக்க வைத்துள்ளது. அந்த 23 வயது இளைஞர் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வெறும் 23,000 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தனது வழக்கமான ஷிப்ட் வேலைகளை அவர் முடித்துள்ளார். ஆனால், அலுவலகத்தில் ஏதோவொரு ‘டெட் லைன்’ இருந்ததால், ஒட்டுமொத்த குழுவும் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என நிறுவனம் வற்புறுத்தியுள்ளது. நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன்னால் அமர்ந்திருந்ததால் அந்த இளைஞருக்குக் கடுமையான கண் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டுவிட்டு, தாங்க முடியாத சோர்வினால் தூங்கச் சென்றுள்ளார்.

அந்த இளைஞர் தூங்கிய பிறகு, நள்ளிரவு 2 மணியளவில் அவரது நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டீம் வாட்ஸ்அப்பில் குரூப் கால் செய்துள்ளது. அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து பெல் அடித்ததால், தூக்கம் கலைந்து எழுந்த அவரது தாயார் போனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, தங்கள் ஊழியர் எங்கே என்று நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, அந்த நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டீம் கோபத்தில் அவரது தாயாருக்குப் ‘புரொபஷனலிசம்’ குறித்து பாடம் நடத்தத் தொடங்கியுள்ளது.

“இது ஒரு ஃபுல்-டைம் வேலை, அப்படியிருக்க உங்கள் மகன் எப்படி இந்த நேரத்தில் தூங்கலாம்?” என்று கேட்டு, அது மிகவும் அநாகரிகமான நடத்தை என மிரட்டியுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர், “வேலை அழுத்தம் இருப்பது புரிகிறது, ஆனால் நள்ளிரவு 2 மணி வரை வேலை செய்யச் சொல்வதும், என் தாயாரிடம் இப்படி அநாகரிகமாகப் பேசுவதும் சரியா? நான் இந்த வேலையை விட்டுவிடலாமா?” என இணையத்தில் நெட்டிசன்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் அந்த நிறுவனத்தின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “அலுவலக விஷயம் என்றால் மெயில் செய்ய வேண்டும், வாட்ஸ்அப்பில் நள்ளிரவில் கூப்பிடக் கூடாது; என் வீட்டுத் தொழிலாளர்களுக்கு உன்னைவிட அதிக சம்பளமும், பிரேக்கும் கிடைக்கிறது, தயவுசெய்து இந்த வேலையை விட்டு வெளியேறு” என மேனேஜ்மென்ட்டை விளாசித் தள்ளி வருகின்றனர்.