மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்குச்  சொந்தமான மருத்துவமனையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும், சிவசேனா கட்சியின் கார்ப்பரேட்டரான (கவுன்சிலர்) ரமேஷ் மகாத்ரே மற்றும் நோயாளியின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Social_Media_News (@socialmedianews.org.in)

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கவுன்சிலர் ரமேஷ் மகாத்ரே அங்கிருந்த பெண் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் வருகை தந்திருந்த மகளிர் மருத்துவ நிபுணர்  உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். கவுன்சிலர் ரமேஷ் மகாத்ரே மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி  காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாஸ்திரிநகர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது அன்றாடப் பணிகளைப் புறக்கணித்து திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்  குதித்துள்ளனர். இதனால் அங்கு வழக்கமான மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அவசரக்காலச் சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.