கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், தனது கணவனைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு, புதைக்கப்பட்டிருந்த கணவனின் தலை தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாஞ்சிடிஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் லோஹ்ரா (29). இவருடைய மனைவி சுபோதினி தேவி. சுபோதினிக்கும், ராமன் சேத் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ராமன் சேத்தை முறைப்படி திருமணம் செய்துகொண்டு அவரோடு வாழ விரும்பிய சுபோதினி, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தனது கணவன் சஞ்சயைக் கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் தலை இல்லாத, பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தலை இல்லாததால் அந்த உடல் யாருடையது என்பதைக் கண்டறிவதில் போலீசாருக்குத் தொய்வு ஏற்பட்டது. இந்த வழக்கு காவல்துறைக்கு ஒரு பெரிய சவாலாக மாறியது.
தலை இல்லாத உடலை அடையாளம் காண தொழில்நுட்ப மற்றும் தடய அறிவியல் ஆதாரங்களை போலீசார் பயன்படுத்தினர். அதன் மூலம், இறந்து கிடந்தது சஞ்சய் லோஹ்ரா என்பது உறுதி செய்யப்பட்டது. சஞ்சய்யின் அடையாளம் தெரிந்தவுடன், அவரது மனைவி சுபோதினி தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, சுபோதினி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராமன் சேத் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவனைக் கொலை செய்ததை சுபோதினி ஒப்புக்கொண்டார்.
சுபோதினியின் கள்ளக்காதலனான ராமன் சேத், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சஞ்சய்யின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சஞ்சய்யின் தலையை தமர் காவல் எல்லைக்குட்பட்ட சுந்தர்டிஹ் கிராமத்தின் அருகிலுள்ள ராணி காட்டுப் பகுதியில் புதைத்துள்ளனர். குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், கொலை நடந்து 17 நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்டிருந்த சஞ்சய்யின் தலையை போலீசார் தோண்டி எடுத்தனர்.
உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமன் சேத்தின் கூட்டாளிகள் இருவரைப் பிடிக்க போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
