மேற்கு வங்க மாநிலம் பரூய்பூரில், கடந்த சனிக்கிழமை மாலை சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று அங்குள்ள ஒரு குளத்தில் இருந்து அச்சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை காண்போரைக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. அச்சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, உடலின் ரகசிய உறுப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடித்த மற்றும் கீறிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், சிறுமி தலையில் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கு மற்றும் தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளார் என்றும், அவர் உயிரோடு இருக்கும்போதே குளத்தில் வீசப்பட்டதால் அவரது நுரையீரல் மற்றும் வயிற்றில் தண்ணீர் இருந்தது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது​இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து பரூய்பூர் பகுதியில் பொதுமக்கள் டயர்களை எரித்தும், சாலை மற்றும் இரயில் மறியலில் ஈடுபட்டும், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கியும் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வன்முறைச் சூழலில், மக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததால், அங்கு 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதன்மை குற்றவாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் சுவேந்து அதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் பேசி கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதோடு, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் நேரில் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து வருவதால் மேற்கு வங்கத்தில் அரசியல் களம் பயங்கர சூடாகிப் போயுள்ளது.