அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் பிரம்மாண்ட இறுதிச் சடங்கு அந்நாட்டுத் தலைநகர் தெஹ்ரானில் உணர்ச்சிப் பெருக்குடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதலில், 36 ஆண்டுகள் ஈரானை வழிநடத்திய அலி காமேனி, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாதக் குழந்தை ஜஹ்ரா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே சமீபத்தில் எட்டப்பட்ட சமரச உடன்பாட்டைத் தொடர்ந்து, சுமார் 6 மாதங்களாகப் பதப்படுத்தப்பட்டிருந்த அவர்களின் உடல்களுக்கு 6 நாட்கள் நடைபெறும் இறுதி அஞ்சலி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது.
தெஹ்ரான் வீதிகளிலும் மசூதி வளாகத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, “அமெரிக்காவுக்கு அழிவு”, “டிரம்ப்பை வீழ்த்துவோம்” மற்றும் “இஸ்ரேல் ஒழிக” போன்ற ஆக்ரோஷமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களின் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி முழக்கமிட்டனர்.
இந்த இறுதிப் பிரார்த்தனையில் காமேனியின் மகன்களான முஸ்தபா, மெசம், மசூத் மற்றும் அந்நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தங்களின் தந்தையின் சவப்பெட்டியைக் கட்டிப்பிடித்து மகன்கள் கதறி அழுத உருக்கமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி உலக அளவில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், ஈரானின் தற்போதைய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மற்றொரு மகனான மொஜ்தபா காமேனி, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று வரும் இந்த இறுதி ஊர்வலம் பல்வேறு புனித நகரங்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, வரும் ஜூலை 9-ஆம் தேதி அலி காமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெஸா நினைவிடத்தில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளன.
