சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தனது 15 ஆவது வயதிலேயே அறிமுகமாகி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தவர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் 2026 தொடரில் அசத்தியது முதல் சர்வதேச கிரிக்கெட் வரை மிகக் குறுகிய காலத்தில் இந்திய ரசிகர்களின் கவனம் ஈர்த்த நட்சத்திரமாக இவர் மாறியுள்ளார். மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டும் வைபவ், மைதானத்திற்கு வெளியே தனது எளிமையான குணத்தால் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களையும் வென்று வருகிறார். இதற்குச் சான்றாக, மைதானத்திற்கு வெளியே அவர் ரசிகர் ஒருவரிடம் காட்டிய நெகிழ்ச்சியான நடத்தை குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

போட்டி ஒன்றின் முடிவில் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்ட ரசிகர் ஒருவர், அவரிடம் ஆட்டோகிராப் (கையெழுத்து) கேட்டுள்ளார். ரசிகரின் ஆசைக்காக வைபவ் ஆட்டோகிராப் போட முற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக அந்தப் பேனா எழுதவில்லை. பொதுவாகப் பெரிய நட்சத்திரங்கள் இதுபோன்ற சமயங்களில் பேனா எழுதவில்லை என்றால், அங்கிருந்து உடனே கிளம்பிவிடுவது வழக்கம். ஆனால், வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, அந்த ரசிகரை ஏமாற்ற விரும்பாமல் அங்கேயே பொறுமையுடன் காத்திருந்தார். மற்றொரு பேனா வரும் வரை காத்திருந்து, அந்த ரசிகருக்கு அன்போடு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றார். இவ்வளவு சிறிய வயதிலேயே அவரிடம் இருக்கும் இந்த எளிமையும்,  குணமும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளதுடன், இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.