இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமைந்தது. 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 ஆவது வயதிலேயே இந்திய அணியில் கால் பதித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம், 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி சாதனை படைத்திருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். தனது முதல் சர்வதேச போட்டியிலேயே 2 அதிரடி சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், துரதிர்ஷ்டவசமாக 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைப் பற்றிப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண நாராயணன் சிவராமகிருஷ்ணன், வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போது ஓய்வு அளிக்காமல், தொடர்ந்து போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “வைபவ் சூர்யவன்ஷிக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள்) தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒரு இளம் வீரரை அணியில் எடுத்துவிட்டு, அவருக்கு உடனே ஓய்வு அளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவனுக்கு இப்போது ஓய்வு தேவையில்லை, வருடம் முழுவதும் அவன் விளையாட வேண்டும். அவன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டிற்குப் பங்களிக்கக்கூடிய திறமைசாலி.
அதற்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அணியின் மூத்த வீரர்களின் ஆதரவும், சரியான வழிகாட்டுதலும் அவனுக்கு மிகவும் தேவை” என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் சில மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரைக் குறிப்பிட்டுப் பேசிய சிவராமகிருஷ்ணன், வைபவ் சூர்யவன்ஷியை ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்றும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவன் தன்னை நிரூபிக்க இதுவே சரியான வாய்ப்பு என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
