உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகரில் வசித்து வந்த 24 வயது இளம் திருமணமான பெண் ஒருவர், தனது வீட்டின் பூட்டிய அறைக்குள் துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்தப் பெண் விக்ரம் யாதவ் என்பவரின் மனைவி சித்தாரா தேவி (Sitara Devi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்களது திருமணம் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், கணவர் விக்ரம் யாதவ் வேலை விஷயமாகக் கடந்த 8 நாட்களுக்கு முன்புதான் வேறு மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.
அவர் வேலைக்குச் சென்ற சில நாட்களிலேயே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சித்தாரா தேவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அறைக்கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சௌக் காவல் நிலைய போலீசாரும் தடய அறிவியல் (Forensic) நிபுணர்களும் அதிரடியாக விரைந்து வந்து, அறையை ஆய்வு செய்து முக்கியச் சான்றுகளைச் சேகரித்துள்ளனர். அதன் பின்னர் சடலத்தைக் கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக (Postmortem) மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்பொழுது முதற்கட்டமாக மரணத்திற்கான காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அறிக்கை வந்த பிறகே முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
