சர்வதேச கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வரலாற்றுத் தருணம், சனிக்கிழமை அன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அரங்கேறியது. வெறும் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாகி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்திய அணிக்காக மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.
தனது அறிமுகப் போட்டியிலேயே 2 அதிரடி சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 14 ரன்களோடு ஆட்டமிழந்தாலும், கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் வகையில் அவரது இந்த சின்ன இன்னிங்ஸ் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பிடித்தது; மேலும் டி20 அணியின் துணை கேப்டன் திலக் வர்மா 122 எண் கொண்ட அறிமுக தொப்பியை வைபவ்விடம் வழங்கியபோது, அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் இளம் வீரர் வைபவ்வின் கண்களில் கண்ணீர் வழிந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்தது.
🚨 VAIBHAV SOORYAVANSHI MAY FACE SUSPENSION FOR DISRESPECTING 🤯
After making his debut against England and receiving his maiden India cap.
Vaibhav Sooryavanshi has gifted his debut cap to one of his Fan, But Reportedly some staff member and management is not happy with this… pic.twitter.com/U7RdZMd78q
— Sports Club (@SportsxClub) July 5, 2026
ஆனால், இந்தப் போட்டி முடிந்த கையோடு வைபவ் சூரியவன்ஷி சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். போட்டி முடிந்த பிறகு அவர் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுக தொப்பியை மைதானத்தில் இருந்த ஒரு ரசிகருக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டதாகவும், இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தீயாய் பரவின.
ஆனால், வைரலாகும் அந்த வீடியோவை உற்று நோக்கினால், அக்ஷர் படேல் மற்றும் திலக் வர்மாவுடன் வைபவ் டிரஸ்ஸிங் ரூமிற்குச் செல்லும்போது, கேலரியில் இருந்த ரசிகரை நோக்கி சைகை காட்டிப் பேசுகிறாரே தவிர, தனது வலது கையில் இருந்த தொப்பியை அவர் யாருக்கும் கொடுக்காமல் பத்திரமாக டிரஸ்ஸிங் ரூமிற்குள் எடுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகிறது; மேலும் இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலிருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராததால், வைபவ் தொப்பியை கொடுத்துவிட்டார் என்று பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
