பாகிஸ்தானில் பணியிடங்களில் ஏற்படும் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களில், பெண்களைத் தாண்டி ஆண்களும் பெருமளவில் பாதிக்கப்படுவது அண்மைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் அங்குள்ள ‘ஃபெடரல் ஒம்புட்ஸ்மேன்’அமைப்பிற்கு கடந்த ஓராண்டில் கிடைத்துள்ள மொத்தம் 1,290 புகார்களில், 521 புகார்கள் ஆண்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த புகார்களில் சுமார் 40 சதவீதமாகும். அதே நேரத்தில், பெண்கள் தரப்பில் இருந்து 769 புகார்கள் வந்துள்ளன.
இது குறிப்பாக இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் 222 வழக்குகள் ஆகிய மாகாணங்களில் உள்ள பணியிடங்களிலிருந்தே ஆண்களிடம் இருந்து அதிகளவிலான புகார்கள் பதிவாகியுள்ளன. பணியிடத் துன்புறுத்தல் என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல என்பதை இந்தத் தரவுகள் உடைத்துக் காட்டியுள்ளன.
இதனால் கடந்த 2022-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாலியல் ரீதியான அத்துமீறல்கள் மட்டுமின்றி, பணியிடத்தில் ஊழியர்களை நிம்மதியாகச் செயல்பட விடாமல் அச்சுறுத்தும் சூழலை உருவாக்குவதும் கடுமையான குற்றமாகக் கருதப்படுக்கிறது.
இதனால், ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் எனப் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது தைரியமாகப் புகார் அளிக்க முன்வருகின்றனர். விழிப்புணர்வுப் பிரசாரங்கள் காரணமாகவே இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உயரதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து பலர் இன்னும் புகாரளிக்கத் தயங்கினாலும், இந்த புதிய சட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் சட்டப்பூர்வ வழிகளை எளியதாக்கியுள்ளன.
