படிப்பு, வேலை மற்றும் கன்டென்ட் கிரியேஷன் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை இன்ஸ்டாகிராம் கிரியேட்டரான ஆர்யா பகிர்ந்துள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாகத் தன்னால் எந்த ஒரு ரீலையும் பதிவிட முடியவில்லை என்பதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக விளக்கியுள்ளார்.

மேலும் தனது அன்றாட வாழ்க்கையில் தினமும் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் ரயிலில் பயணம் செய்வது, ஐந்து மணி நேரம் படிப்பது மற்றும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது என அவரது முழு நேரமும் இதிலேயே செலவாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளின் இறுதியில் புதிய வீடியோக்களைப் பதிவு செய்யத் தன்னிடம் போதிய ஆற்றல் இருப்பதில்லை என்று ஆர்யா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பதிவிட முடியாததால் தனக்குள் ஒருவித குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும், வளர்ச்சி என்பது தினமும் சமூக ஊடகங்களில் தோன்றுவது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் சவால்களைக் கடந்து மீண்டும் மீண்டு வருவதுதான் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டதாக ஆர்யா விவரித்துள்ளார்.

மேலும், இது தனது போராட்டக் காலம் என்றும், நிச்சயம் ஒரு நாள் தனது வாழ்க்கையின் மிக அழகான அத்தியாயமாக இது மாறும் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து தான் தற்காலிகமாக விலகியிருப்பது தனது உத்வேகத்தை இழந்ததால் அல்ல, சூழ்நிலையின் கட்டாயத்தால் மட்டுமே என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்நிலையில் இனி வாரத்திற்கு இரண்டு முறையாவது புதிய கதைகளுடன் ரீல்களைப் பதிவிடுவேன் என்று உறுதியளித்துள்ளார். இவரது இந்த நேர்மையான மற்றும் கடின உழைப்பைக் பாராட்டி, இணையவாசிகள் பலரும் அவருக்குப் பாராட்டுகளையும் ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.