மேற்குவங்க அரசியலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சியில் அதிருப்தியில் இருக்கும் சில முக்கிய தலைவர்கள், எதிர்க்கட்சியான பாஜாகவுடன் ரகசியக் கூட்டு சேர்ந்து கொண்டு தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சமூக வலைத்தள நேரலையில் (Social Media Live) தோன்றி தொண்டர்களிடம் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக கட்சியில் அனைத்துப் பதவிகளையும், சுகபோகங்களையும் அனுபவித்தபோது வராத கருத்து வேறுபாடு, இப்போது திடீரென எங்கிருந்து வந்தது என்று அதிருப்தி தலைவர்களை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, கட்சியில் இருந்து கொண்டு துரோகம் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக பாஜகவில் இணைந்துவிட்டு நேருக்கு நேராக என்னுடன் மோதிப் பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார்.
மேலும், கட்சி சோதனையான மற்றும் கடினமான காலகட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் விசுவாசமாக இருக்கும் சாதாரண தொண்டர்கள் மட்டும்தான் கட்சியின் உண்மையான பொக்கிஷம் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மம்தாவின் இந்த அதிரடி பேச்சு, மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் சும்மா தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
