பெங்களூருவில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிமேல் பெங்களூரு வாசிகள் தங்களது வாகனங்களை கழுவவோ, வீட்டுத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சவோ, சாலைகளைச் சுத்தம் செய்யவோ அல்லது நீச்சல் குளங்களை நிரப்பவோ சுத்திகரிக்கப்பட்ட (Recycled) நீரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று வாரியத் தலைவர் மஞ்சுளா கறாராக அறிவித்துள்ளார். மக்கள் தங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் மிகத் தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான உத்தரவை மீறி, யாராவது குடிநீரை வீணடித்தால் அவர்களுக்கு உடனடியாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களின் வீட்டிற்கான குடிநீர் விநியோகத்தில் 50 சதவீதம் உடனடியாகக் குறைக்கப்படும் என்ற அதிரடி ஷாக்கையும் வாரியம் கொடுத்துள்ளது. தண்ணீரைச் சேமிக்கவும், வீணாவதைத் தடுக்கவும் பெங்களூரு அரசு எடுத்துள்ள இந்த கிடுக்கிப்பிடி ஆக்ஷன், தற்போது அந்த நகரம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
