வளைகுடா பிராந்தியத்தில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கியுள்ள வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் வெனிசுலாவை ஒரே நாளில் வீழ்த்தினோம், ஈரானையும் கடுமையாகத் தாக்கினோம். தற்போது அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள், எப்படியாவது சமரசம் செய்ய விரும்புகிறார்கள்.
நாங்கள் நல்லவர்கள் என்பதால் தான், இந்த இறுதிச் சடங்கு நிகழ்விற்காக அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்துள்ளோம் என்று டிரம்ப் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அணுஆயுதம் தயாரிக்க முயன்றதால், அது இஸ்ரேலுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் ஆபத்து என அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதின. இதன் விளைவாக, கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியதால், கடந்த 4 மாதங்களாகப் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. தற்போது நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்காது என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே, தள்ளி வைக்கப்பட்டிருந்த கமேனியின் இறுதிச்சடங்கை நடத்த ஈரான் முன்வந்துள்ளது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்களில் 6 நாட்கள் நடைபெறும் இந்த இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே, 36 ஆண்டுகள் ஈரானை வழிநடத்திய கமேனியின் குடும்பமே பிப்ரவரி தாக்குதலில் பலியான நிலையில், படுகாயங்களுடன் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் அவரது மகனின் நிலை குறித்து இன்னும் மர்மம் நீடிக்கிறது. அவர் இதுவரை பொதுவெளியில் எங்கும் காணப்படாததோடு, இந்த இறுதிச்சடங்கு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது ஈரானியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
