காதலின் சின்னமாகத் தன் மனைவி மும்தாஜுக்காகத் தாஜ்மகாலைக் கட்டினான் மன்னன் ஷாஜகான். அவனிடம் உலகத்தில் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் வசதியும் வாய்ப்பும் இருந்தது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி, தன் மனைவி படும் கஷ்டத்தை உணர்ந்து, அவருக்காக வீட்டிலேயே சொந்தமாக ‘எஸ்கலேட்டர்’ (நகரும் படிக்கட்டு) ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த சட்டி சிவநாராயண ரெட்டி என்ற இந்த விவசாயி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெரிய அளவில் படிக்காவிட்டாலும், மின்சாரத் துறையும் எந்திரவியலும் இவருக்கு மிகவும் பிடித்தமான துறைகளாக இருந்துள்ளன.

இவரது மனைவிக்குக் கடுமையான மூட்டு வலி இருந்ததால், வீட்டில் உள்ள படிக்கட்டுகளில் கூட ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மனைவியின் இந்த தீராத கஷ்டத்தைப் பார்த்த நாராயண ரெட்டி, பெரிய ஜவுளிக்கடைகளில் இருக்கும் நகரும் படிக்கட்டுகள் போலத் தன் வீட்டிலும் ஏன் செய்யக்கூடாது என்று யோசித்துள்ளார். அதன்படி வெறும் 20 நாட்களில், 300 கிலோ எடையைத் தாங்கக்கூடிய ஒரு அற்புதமான எஸ்கலேட்டரை தனது வீட்டிலேயே வடிவமைத்து அசத்தியுள்ளார்.

முன்னணி நிறுவனங்கள் மூலம் இதைச் செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், இவர் வெறும் 70 ஆயிரம் ரூபாயில், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் இதைப் பாதுகாப்பாக உருவாக்கியுள்ளார். இப்போது, தனது கணவர் காட்டிய பாசத்தையும் அக்கறையையும் நினைத்துப் பூரித்துப்போன அவரது மனைவி, அந்த எஸ்கலேட்டர் மூலம் வலி இல்லாமல் சிரித்தபடியே படிக்கட்டுகளில் இறங்கி வருகிறார். தேவையோடும் மன உறுதியோடும் உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படிக்காத மேதை ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Wirally (@wirally)