சமூக வலைத்தளங்களில் தற்போது சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், மனிதாபிமானம், தைரியம் மற்றும் சுயநலமற்ற உதவிக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஒரு அரிய காட்சி பதிவாகியுள்ளது. இரயில் நிலையம் ஒன்றில் ஒரு ரயில் சில நிமிடங்கள் வந்து நிற்கிறது. அப்போது ஒரு தாய், தனது மூத்த மகளுடன் அவச அவசரமாகப் பிளாட்பாரத்தில் இறங்குகிறார்.

ஆனால், லக்கேஜ்களைப் பார்த்துக் கொள்ளும் பதற்றத்திலும் அவசரத்திலும், அவரது சிறிய குழந்தை ரயிலுக்குள்ளேயே மாட்டிக் கொள்கிறது. அதற்குள் ரயிலும் மெதுவாகப் புறப்பட்டு நகரத் தொடங்குகிறது. தனது பச்சிளம் குழந்தை ரயிலுக்குள் இருப்பதை உணர்ந்த அந்தத் தாய், பதற்றத்தில் அலறியடித்துக் கொண்டு நகரும் ரயிலுடனே ஓடத் தொடங்குகிறார். தாயின் பயத்தையும் அலறலையும் பார்த்து மூத்த மகளும் பயந்து போய் தாயுடன் ஓடுகிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், ரயிலில் இருந்த ஒரு அடையாளம் தெரியாத இளைஞர் கொஞ்சமும் யோசிக்காமல், சமயோசிதமாகச் செயல்பட்டு உதவிக்கு வருகிறார். நகர்ந்து கொண்டிருந்த ரயிலுக்குள் இருந்து அந்தச் சிறிய குழந்தையைப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி, பிளாட்பாரத்தில் அழுதுகொண்டே ஓடிவந்த தாயிடம் குழந்தையை ஒப்படைக்கிறார். பின்னர், சற்றும் தாமதிக்காமல் வேகம் எடுக்கத் தொடங்கிய ரயிலில் மீண்டும் ஏறிச் சென்றுவிடுகிறார்.

ஒரு தேவ தூதனைப் போல நொடிப் பொழுதில் வந்து உதவி செய்துவிட்டு, அந்த இளைஞர் ரயிலோடு மறைந்து போகிறார். இறுதியாகத் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அந்தத் தாயின் முகத்தில் தெரிந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் பார்ப்போரைக் கண் கலங்க வைக்கிறது. எக்ஸ் (X) தளத்தில் ‘@SitamarhiJila’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரை “நிஜ உலக ஹீரோ” என்றும், இந்தத் சுயநலமற்ற செயலானது “இன்னும் மனிதாபிமானம் உயிரோடு தான் இருக்கிறது” என்பதற்குப் சான்றாக அமைந்துள்ளது என்றும் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர்.