இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டது, வெறும் சாதாரண அணியின் மாற்றமாக மட்டும் பார்க்கப்படவில்லை. “ஏன் எப்போதுமே சஞ்சு சாம்சன் தான் முதலில் பலிகடா ஆக்கப்படுகிறார்?” என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஆதங்கக் கேள்வியை இது மீண்டும் எழுப்பியுள்ளது. ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் அசுரத்திறமை கொண்ட சஞ்சு சாம்சன், ஏன் எப்போதுமே ஒரு வாரம் சுமாராக ஆடினாலும் அணியை விட்டு தூக்கப்படும் விளிம்பிலேயே இருக்கிறார் என்ற கேள்விக்கு பின்னால் ஒரு கசப்பான உண்மையும் ஒளிந்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் 57 இன்னிங்ஸ்களில் 1405 ரன்கள், 155.42 ஸ்டிரைக் ரேட், 3 சதங்கள், 6 அரைசதங்கள், மற்றும் 84 சிக்ஸர்கள் என சஞ்சுவின் புள்ளிவிவரங்கள் மிரட்டலாக இருந்தாலும், அவரது சராசரி வெறும் 27.02 மட்டுமே. இதில் கொடுமை என்னவென்றால், அவர் அடித்த மொத்த ரன்களில் 56.4 சதவீத ரன்கள் வெறும் 9 இன்னிங்ஸ்களில் மட்டுமே வந்தவை. மீதமுள்ள 48 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 13.6 ரன்கள் தான்.
சஞ்சு சாம்சனிடம் அசாத்திய திறமை இருக்கிறது, ஆனால் அவரிடம் “நிலையான ஆட்டம்” இல்லை என்பதே தேர்வுக்குழுவின் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையாக உள்ளது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 97*, 89, 89 என மாஸ் காட்டிய சஞ்சு, அடுத்தடுத்து வந்த போட்டிகளில் 5, 0, 1 என ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி பழையபடி சொதப்பல் ஃபார்முக்கு திரும்பினார். ஒரு ஓப்பனராக களம் இறங்கிய 31 இன்னிங்ஸ்களில், 18 முறை அவர் 20 ரன்களுக்கு உள்ளாகவும், 5 முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார். இப்படி ஒரேயடியாக உச்சத்துக்குச் செல்வதும், அடுத்த கணமே பாதாளத்துக்கு விழுவதுமாக இருக்கும் சஞ்சுவின் ஆட்டம் தான் அவருக்கு வினையாக முடிந்துள்ளது.
உலகக் கோப்பை ஹீரோவாக இருந்தாலும், அடுத்தடுத்து சொதப்பும்போது, வெளியே வைபவ் சூர்யவன்ஷி போன்ற அடுத்த தலைமுறைக்கான அசாத்திய திறமை கொண்ட இளம் வீரர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து அணியில் நீட்டிக்க வைப்பது நிர்வாகத்திற்கு கடினமாகிவிடுகிறது. சஞ்சுவின் பலம் என்னவென்று இந்திய அணிக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அவர் எப்போது நன்றாக ஆடுவார், எப்போது சொதப்புவார் என்று கணிக்க முடியாததே அவரது கிரிக்கெட் பயணத்தின் சோகமான நிதர்சனம்.
