இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் போட்டிக்குப் பிறகு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடிக்கொண்டிருந்தபோது, கடைசி 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 17-வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய், அடுத்தடுத்து நோ-பால்களை வீசி சொதப்பினார். இதனைப் பயன்படுத்திய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேகப் பெத்தேல் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தை அப்படியே இங்கிலாந்து பக்கம் திருப்பினார்.
போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “போட்டி எங்கே கைவிட்டுப் போனது என்று நமக்கே தெரியும். நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. 15 ஓவர்கள் வரை நாம் நன்றாகத்தான் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் திடீரென ஆட்டம் அவர்கள் பக்கம் போய்விட்டது என்று ரவி பிஷ்னோய்யின் பெயரைச் சொல்லாமல் அவரை மறைமுகமாகக் சாடிப் பேசினார்.
same vibes 😭😭😭 https://t.co/rSXEnj6mhK pic.twitter.com/XbYDa6QNSB
— soo washed (@anubhav__tweets) July 4, 2026
யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே, ரவி பிஷ்னோய்யின் ஓவரைத் தான் தோல்விக்குக் காரணம் என ஸ்ரேயாஸ் ஐயர் பப்ளிக்காகக் கை காட்டியது ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கேப்டனாகத் தோல்விக்குத் தானே பொறுப்பேற்காமல், சக வீரர் மீது பழியைப் போடுவதாகக் கூறி ரசிகர்கள் அவரைச் சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.
தோனி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னாள் கேப்டன்கள் தோல்வியின்போது வீரர்களைக் காப்பார்கள் என்றும், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போலப் பேசுகிறார் என்றும் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். 2023-க்குப் பிறகு டி20 அணிக்குத் திரும்பி, தற்போது கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
