சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அடுத்தடுத்து அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரைத் தன் பக்கம் இழுத்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளில் செல்வாக்கோடு இருந்த முக்கியப் புள்ளிகள் பலரும் தளபதி விஜய்யின் அரசியல் கொள்கை மற்றும் தலைமைத்துவத்தை ஏற்று தவெக-வில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த அதிரடி இணைப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணராயபுரம் கீதா மணிவண்ணன், கரூர் மணிவண்ணன், திமுகவின் வி.பி.கலைராஜன், நிலக்கோட்டை அன்பழகன், உசிலம்பட்டி பாண்டியம்மாள், ஆலந்தூர் திமுகவின் கண்டோன்மெண்ட் சண்முகம், கூடலூர் ஜெயசீலன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் சின்னசாமி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இவர்களுடன் பிரபாகரன், பார்த்திபன், பையூர் சந்தானம் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவெக கொடியைப் பிடித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில், மாற்றுக்கட்சியின் முக்கிய விஐபிக்கள் மொத்தமாக பனையூரில் தஞ்சம் புகுந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
