பாகிஸ்தானில் மகப்பேறுக்கு பின் தாயின் உடலில் இருந்து பிரிக்கப்படும் ‘பிளசன்டா’ (நஞ்சுக்கொடி) திசுக்களை சட்டவிரோதமாகச் சேகரித்து, முதுமையைத் தடுக்கும் ஊசி மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பலை அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது செய்துள்ளது.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள சில மருத்துவமனைகளில் இருந்து ஒரு பிளசன்டாவை வெறும் 800 பாகிஸ்தானி ரூபாய்க்கு வாங்கும் இந்தக் கும்பல், அதை உலர்த்தி, தூளாக்கி வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளது. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்ட பதப்படுத்தும் மையம் கண்டுபிடிக்கப்பட்டு 500 கிலோ மனித திசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வியட்நாமிற்கு கடத்தவிருந்த 100 கிலோ பார்சலையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இக்கும்பல் லாகூர், பெஷாவர் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் வழங்கும் தற்காலிக உறுப்பான பிளசன்டா, பிரசவத்திற்குப் பிறகு தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவக் கழிவாகும். இதனைப் பாதுகாப்பான முறையில் மட்டுமே அழித்துச் சாம்பலாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், இதில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக நம்பி, சில நாடுகளில் அழகுசாதன ஊசி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு கடத்தப்படும் பிளசன்டா மூலம் சர்வதேச சந்தையில் தயாரிக்கப்படும் ஒரு ‘ஆண்டி ஏஜிங்’ ஊசி மருந்தின் விலை சுமார் 7 லட்சம் பாகிஸ்தானி ரூபாய் வரை விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த நஞ்சுக்கொடி திசுக்கள் மனித உடலைப் புதுப்பித்து இளமையைத் தக்கவைக்கும் என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று என நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.