மகாராஷ்டிர மாநிலம் தானேவின் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ‘ஜானகி குளோபல்’ தனியார் மருத்துவமனையில், வெறும் 1,500 ரூபாய் மருத்துவக் கட்டணத்திற்காக மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் சோனு என்ற நோயாளி காய்ச்சல் காரணமாக இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மொத்தக் கட்டணமாக 2,000 ரூபாய் வந்துள்ளது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் அதனை 1,500 ரூபாயாகக் குறைத்துக் கேட்டுள்ளது.

“>

இருப்பினும், அந்தப் பணத்தைச் செலுத்த மறுத்த நோயாளி, முதலில் ஆன்லைனில் (GPay) அனுப்புவதாகக் கூறி மழுப்பியுள்ளார். பின்னர், தனது நண்பர் கீழே பணத்துடன் காத்திருப்பதாகக் பொய் கூறி, ஊழியர்களை வெளியில் வரவழைத்துள்ளார்.

இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் கீழே சென்றபோது, அங்கு இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளுடன் மறைந்திருந்த கும்பல் திடீரென மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் டாக்டர் அசோக் என்பவருடன் சேர்த்து பல மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.