சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் திரைப்பட பாணியில் கணவனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற மனைவி, தானும் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு விவசாயி தன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பயங்கர நச்சுத்தன்மை கொண்ட கோப்ரா பாம்பு ஒன்று அவரது விரலில் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது விரல் வீங்கி, தலைசுற்றல் ஏற்பட்டு உடல் முற்றிலும் பலவீனமடைந்தது.
கணவனின் இந்த கவலைக்கிடமான நிலையைப் பார்த்து பதறிய அவரது மனைவி, சற்றும் யோசிக்காமல் சினிமாக்களிலும் டிவிகளிலும் காட்டுவதைப் போல, கணவனின் காயத்தில் தன் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி துப்ப முயன்றுள்ளார். இதன் பின்னர் கணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பத்தில் மனைவி நலமாக இருப்பது போல் தோன்றினாலும், சில மணி நேரங்களிலேயே விஷத்தின் தாக்கம் அவருக்கும் பரவி வாய், நாக்கு, முகம் மற்றும் கை, கால்கள் மரத்துப்போகத் தொடங்கின. அடுத்த நாள் உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், அவரும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருவருக்கும் நச்சுமுறிவு மருந்துகள் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினர்.
பாம்பு கடித்தவுடன் வாயால் விஷத்தை உறிஞ்சலாம் என்ற தவறான எண்ணத்தை மக்கள் உடனே கைவிட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மனிதனின் வாய்க்குள் மிக நுண்ணிய இரத்த நாளங்கள் இருப்பதால், விஷத்தை உறிஞ்சும்போது அது நேரடியாக உறிஞ்சுபவரின் இரத்தத்திலும் கலந்துவிடும் ஆபத்து உள்ளது. பாம்பு கடிக்கும் தழும்பு மிகச் சிறியதாக இருந்தாலும், விஷம் சில நொடிகளிலேயே தோலின் அடிப்புறத்தில் பரவிவிடுவதால் அதை வாயால் உறிஞ்சுவது முற்றிலும் சாத்தியமற்றது என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
அதேபோல், பாம்பு கடித்த இடத்தில் பிளேடு அல்லது கத்தியால் கீறி இரத்தத்தை வெளியேற்ற முயலக் கூடாது; இது அதிக இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயை உண்டாக்கும். காயத்தில் தீ வைப்பதோ அல்லது ஐஸ் கட்டிகளை வைப்பதோ முற்றிலும் தவறான வழிமுறையாகும். பாம்பு கடித்தால், நோயாளி உடலை அசைக்காமல் நேராக படுக்க வைத்துவிட்டு, உடனடியாக அவசர மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டும். முடிந்தால் பாம்பின் நிறம், வடிவம் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்வது அல்லது பாதுகாப்பான தூரத்தில் இருந்து புகைப்படம் எடுப்பது மருத்துவர்கள் சரியான நச்சுமுறிவு மருந்தை வழங்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
