இலங்கையின் கிராமப்புறப் பின்னணியில், நெல் வயல்களும் பனை மரங்களும் சூழ்ந்த ஒரு அழகான சூழலில், சிறுமி ஒருவர் வனவிலங்குகளுடன் எவ்வித பயமும் இன்றி மிகவும் இயல்பாகப் பழகும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலகளவில் வைரலாகி கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்று வருகிறது. அந்த வீடியோவில், சாதாரண உடை  அணிந்துள்ள அந்தச் சிறுமி, வயல்வெளியின் குறுகிய வரப்புகளில் நடந்து செல்ல, அவளுக்குப் பின்னால் ஒரு குட்டி முள்ளம்பன்றி செல்லப் பிராணி போல வாலை ஆட்டிக்கொண்டு பின்தொடர்கிறது.

அதுமட்டுமன்றி, அந்தச் சிறுமி தனது கைகளில் புனுகுப்பூனை (Civet Cat) என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அடர்ந்த உரோமம் கொண்ட விலங்கையும் எவ்வித அச்சமுமின்றித் தூக்கிச் செல்கிறார். காடுகளில் மனிதர்களைக் கண்டாலே தற்காப்புக்காகத் தாக்கும் அல்லது ஒளிந்து கொள்ளும் குணம் கொண்ட இத்தகைய விலங்குகள், அந்தச் சிறுமியின் அன்பிற்குக் கட்டுப்பட்டு அவளது மடியில் சாதுவாக அமர்ந்திருக்கும் காட்சிகளைக் கண்ட நெட்டிசன்கள், அந்தச் சிறுமியை நிஜ உலக ‘டிஸ்னி இளவரசி என்று வர்ணித்துப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியதும், இது வங்கதேசத்தில்  உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்று பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வதந்திகளை உருவாக்கினர். ஆனால், இந்த வீடியோவின் உண்மைப் பின்னணியை ஆராய்ந்த போது, இது இலங்கையைச் சேர்ந்த ‘பிரபாத் சில்வா’ என்ற ஃபேஸ்புக் பயனர் ஜூன் மாதத்தில் முதன்முதலில் பதிவிட்டது என்பது உறுதியானது.

அந்த வீடியோவில் சிறுமி பேசும் போது, சிங்கள மொழியில் பேசியது தெரியவந்ததால் அவர் இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காடுகளின் எழிலையும், மழலையின் தூய்மையான அன்பையும் பறைசாற்றும் இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்களது வாழ்த்துகளையும், பாசமழை பொழியும் கமெண்டுகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.