தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மக்கள் மத்தியில் செல்ல விடாமல் திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதனால் தான் முதல்வர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு போக முடியவில்லை. காவல்துறையை தவறாக திட்டமிட்டே பயன்படுத்தி கரூரில் ஒரு செயற்கையான கூட்ட நெரிசல் விபத்தை திமுக ஏற்படுத்த முயன்றது.
அவர்களின் கண்ணீரின் பாவம் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது. இனி கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்வராக ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார் அவர்கள் குடும்பத்தோடு லண்டனுக்கு போய் செட்டில் ஆக வேண்டியது தான். கரூர் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கண்டிப்பாக கரூரை நாங்கள் மீட்போம். கரூரை மீட்பதற்கு தமிழக வெற்றிக்கழகத்திடம் ஒரு தனி கணக்கு உள்ளது. கண்டிப்பாக கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம். மேலும் இனிமேல் ரெட் ஜெயன்ட் நினைத்தாலும் படங்களை ரிலீஸ் பண்ண முடியாது. தமிழகத்தில் இனி அனைவரும் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் கண்டிப்பாக அப்படி ஒரு நிலைமையை தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.
